Monday 19 February 2018

இனி வச்சு செய்வோம் 1



"பொறுமையா, நிதானமா போ .... எந்த ஒரு விஷயத்துக்கும் நேரம், காலம் கூடி
வரணும்"ன்னு பெரியவங்க அடிக்கடி சொல்வாங்க ....... ஆனா, அதை நின்னு கேட்கிறதுக்கு கூட பொறுமை நமக்கு இல்லாம, "பெருசு சும்மாவே இருக்காது, எதை சொன்னாலும் அதுக்கு ஒரு ஒப்பீனியன், ஒரு சஜஷன் ...... எல்லாம் எங்களுக்கு தெரியும்னு மனசுக்குள்ளேயே நெனைச்சுக்கிட்டு , நாம பாட்டுக்கு நம்ம நினைச்சதை செஞ்சுக்கிட்டு இருந்து இருப்போம்........!
"நீங்க நினைக்கிறபடி மட்டுமே நாங்க நடக்கணும்னா , அதுக்கு நான் நீயாவே பொறந்து இருக்கலாம்ல! இல்லைல.... அப்புறமும் ஏன்? என் வாழ்க்கையை என்னை வாழ விடுங்க பெருசு....!" - ஒரு அட்வைஸ் கொடுத்தாலே , அரை மணி நேரத்துக்கு மனசு அவங்களை தொவைச்சு , தொங்கப் போட்டுட்டுத்தான் மத்த வேலையைவே பார்க்க ஆரம்பிக்கும்...!
ஆனால், நாம நினை(பற)க்கிறோம்ங்கிறதுக்காக காலம் நமக்கு எல்லா அனுகூலமும் செய்யுமா? இல்லை... நிச்சயமாக இல்லை....! எடுக்கிற எல்லா முயற்சிகளுமே வெற்றி அடைவதில்லை....!  பத்துக்கு மூணு போச்சா? பரவா இல்லை.... ! அவன் வெற்றி அடைந்தவன்...! பத்துக்கு எட்டு அடி வாங்கியாச்சு ...! இது சுமார்...! பத்துக்கு பத்துமே  அடி...! பாவம்தான்...!
ஆனா, அதுலேயும் ஒரு கணக்கு இருக்கு...! முதல் ஏழு வெற்றி... அடுத்த மூணுலேயும் அடி..! இதுவும் பாவம் தான்...!
ஒரு உதாரணத்துக்கு பார்ப்போம் - உங்க கூட படிச்ச / அல்லது வேலை பார்த்த நான்கு நண்பர்கள்....! கிட்டத்தட்ட ஒரே சூழ்நிலை, கல்வி, திறமை, எல்லாம் இருக்குதுன்னு வைச்சுப்போம்...! ஒரு பத்து , பதினஞ்சு வருஷம் கழிச்சு அவங்க நாலு பேரும் எப்படி இருக்கிறாங்கன்னு பாருங்க...? எல்லோரும் ஒரே மாதிரி இருக்கிறாங்களா? இல்லையே...?
ஒருத்தர் ஓஹோ ! இரண்டு பேர் பரவா இல்லை...! இன்னும் ஒருத்தர் மட்டும் - ரொம்ப பாவமா இருப்பார்..! கரெக்டா....? அது ஏன்?
அது மட்டும் இல்லை... அந்த ஒரே ஒரு பாவமா இருக்கிறவர் மாதிரி தான் , பெரும்பாலும் எல்லோருக்குமே நிலைமை....! இப்போ , இந்த நொடி இந்த கட்டுரையை படிக்கிற நண்பர்களில், பத்துக்கு ஒன்பது பேர் - இந்த ரகம் தான்...! அவங்களுக்குத் தான் இந்த கட்டுரையே.... மீதி ஒருத்தருக்கு, இது செம மொக்கை பாஸ்...னு தோணும்... ! நீங்க கை கொடுங்க பாஸ்....! நிச்சயமா இது உங்களுக்கு இல்லை... நீங்க பாட்டுக்கு  whatsapp , facebook, அனிருத்தோட 'தங்கமே உன்னை தான் தேடி வந்தேனே' ன்னு ஹம் பண்ணிக்கிட்டு ஜாலியா இருங்க...! கம்பீருக்கும் - மனோஜ் திவாரிக்கும் கிரவுண்ட்ல சண்டையாமே...!
இவங்க எல்லாம் எப்போவாவது கூகுள் செர்ச்ல எசகு பிசகா, தவறிப்போய் உள்ளே வந்து , அப்புறம் துண்டைக் காணோம்னு ஓடுற இளசுங்க....! 
ஆனா, உண்மையிலேயே எனக்கு தனிப்பட்ட முறையிலே பெருமையான விஷயம், இந்த தளத்தோட நீண்ட நாள் வாசகர்களில் பாதி பேருக்கு மேலே, முப்பது வயசுக்கு குறைவான இளைஞர்கள்...! எப்படியாவது வாழ்க்கையில் நல்ல முறையில் முன்னுக்கு வரத் துடிக்கும் முனைப்பு உள்ளவர்கள்...! சரி, மீதி பாதி பேர்... வயசு ஆனாலும் , மனசுக்கு நிம்மதி , ஒரு புத்துணர்வு , நம்பிக்கை கெடைக்கும்னு வர்றவங்க...! சார், உங்களுக்கு என்னை தெரியாது, என்னை உங்களுக்கு தெரியாது - ஆனா, நான் வாழ்க்கையிலே இப்போ ஒரு மெச்சூர்ட் மன நிலைமைக்கு வர உங்க எழுத்து ஒரு முக்கிய காரணம்னு நிறைய வாசகர்கள் - குறிப்பா போன கட்டுரைக்கு அப்புறம், நிறைய மின்னஞ்சல்கள், விசாரிப்புகள்...!
ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி...! நானே இந்த அளவு எதிர் பார்க்கலை....! ஒரு பிரேக் விடுவோம்... ! ரொம்ப தீவிரமா இருக்கிறவங்க, அட்லீஸ்ட் ஒரு மாசத்துக்குள்ளே பதிவைப் பார்ப்பாங்க , பார்க்கலாம்னுதான் நினைச்சிருந்தேன்...!
உடனே, இதுக்கு மேலே தொடர்ந்து , அடிக்கடி எழுதுறேன்னு உங்களை மெர்சலாக்க விரும்பலை ..... (நல்ல வேளை....!) முடியும்போது கண்டிப்பா எழுதுறேன்......
 சரி, விஷயத்துக்கு வருவோம்... எங்க விட்டேன்...! ஹாங் அந்த பாவப்பட்ட ஒருத்தர்...  அட,நம்மளை மாதிரி ஒருத்தர்....! ஹ்ம்ம்... ஓகே...!
எல்லாம் தலைவிதி சார்...! விதிப்படி தான் நடக்கும்.... ! நாலஞ்சு தடவை பரவா இல்லை சார்...! கை வைக்கிறது எல்லாமே சொதப்புனா? இல்லை....?
சரி, விதி .... விதின்னு ஒன்னு நிஜமாவே இருக்கா...! 
விதி தான் ஒருவனின் கர்ம வினைகள்னு நம்ம சாஸ்திரம் - இந்து மதம் சொல்லுது....! 
கொஞ்சம் சீரியசாவே யோசிப்போம்...!
உங்கள் எண்ணங்களே நிஜங்களாகின்றன. உங்களுடைய தற்போதைய நிலை (நிஜம்) என்பது இது வரை தங்கள் மனத்தில் எழுந்த எண்ணங்களும் , அவற்றை ஒட்டி நடந்த செயல்களும் கலந்த மொத்த கலவையே இன்றி வேறில்லை. வாழ்க்கை என்பது வெறும் திட்டமிடா விஷயமல்ல. எனவே, நம் எண்ணங்களை சரிவர செதுக்குவதே நமக்கு முக்கியமான தீர்வு...
நம் ஞானிகள் சொல்றபடி விதிக்கப்பட்டதே எல்லோருக்கும் நடக்கும்...! நாம செஞ்ச பாவ / புண்ணியம் நமக்கு திரும்ப கிடைக்கும் ..... அதுலே கொஞ்சம் கூட மாற்றமில்லை......
நல்லபடி நம்மளை நினைக்க வைக்கிறதுக்கே , நம்ம கர்ம பலன் தான் / விதி தான் கை கொடுக்கணும்...! நாம என்ன தான் நினைச்சாலும், செஞ்சாலும் - முடிவு , பலா பலன் , ஆண்டவன் கையிலே.... அந்த சக்தியை நீங்க கடவுள், விதி , இல்லை தன்  வினை / கர்ம பலன் எப்படி வேணும்னாலும்....  
(அண்ணே! இதை பூவுன்னு சொல்லலாம், புயிப்பம்னு சொல்லலாம், இல்லை நீங்க சொல்ற மாதிரியும்............)
அப்போ, அந்த சுமாரா இருக்கிறவர் - ஒன்னும் செய்ய முடியாதா...? ஜெயிக்கவே முடியாதா...?
ஏமாற்றம் மட்டுமே வாழ்க்கையா....?
வாழ்க்கையிலே எடுக்கிற முயற்சி எல்லாமே வீண்தானா...?
நானும், நாலு பேர் மதிக்கிற மாதிரி ஆக முடியாதா...?    
நான் கும்புடுற தெய்வம் எனக்கு உதவி செய்யாதா...?
அடுத்தவங்க மதிக்கிறதை விடுங்க....! காசு இருந்தா மதிப்பாங்க.... காசு இருக்கிற வரைக்கும் தான் மதிப்பாங்க....! காசு மட்டுமே முக்கியம் இல்லை....! அதனாலே அவங்களை நாங்களும் மதிக்கிறதில்லை...  ஆனா, ஒரு சுய மதிப்புன்னு இருக்குது இல்லை? எனக்கே என்னை புடிக்காம போயிடுமோன்னு பயம் வர ஆரம்பிக்குது....
ஒரு லெவல் வரைக்கும் ஏமாற்றம் தாங்கிக்கலாம்....! அதை தவிர்க்க போராடலாம்...! அதுவே கொஞ்சம் ஒரு லெவல் தாண்டின பிறகு......? ஏமாற்றம்  பழகிடும்...! சரி, விடு ஒதுங்கிடுவோம்னு சும்மாவும் இருக்க முடியாது...!
வேற வழியே இல்லாம ஏமாற்றம் இப்போ நம்பிக்கை ஆகும்....!
இல்லை, எப்படியும் நிலைமை மாறும்னு ஒரு நம்பிக்கை...! 
நம்புவது ஒன்றே உயிரைப் போக விடாமல் காக்கும் ஜீவ மந்திரம்...! 
ஒருத்தர் ஜாதகத்தைப் பார்த்து , ஜோசியர் ஒருத்தர் , அண்ணே ! அம்பது வயசு வரைக்கும் - கடுமையான போராட்டம் உங்களுக்கு, கஷ்டம்னா, கஷ்டம் .....  அப்படி ஒரு கஷ்டம்...!
அதுக்கு அப்புறம் ..! நல்லா இருக்குமா தம்பி ...?
ஹ்ம்ம்... இல்லைண்ணே .... அதுவே பழகிடும்......!  
நிஜமாவே இந்த ஜோக் பார்க்கிறப்போ வாய் விட்டு சிரிச்சிருப்போம்... ஆனா, கொஞ்சம் யோசிச்சுப் பார்த்து பதறி இருப்போம்... நமக்கும் இதே நிலைமை தானா?
 சரி,  ஏதாவது விதி விலக்கு .....! மொதல்லே விதியை பற்றி கொஞ்சம் யோசிப்போம்.... அப்புறம் விலக்கை விளக்குவோம்....!
=================================================
அர்த்தமுள்ள இந்து மதத்தில் இருந்து கண்ணதாசன் வரிகளை கொஞ்சம் கடன் வாங்கிக்கிறேன்... .....
உனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையே ‘விதி’ என்று கூறப்படுகிறது. 
உனதுவாழ்க்கை எந்தச் சாலையில்போனாலும், அது இறைவன் விதித்ததே.
ஜனனம் உலகமெங்கும் ஒரே மாதிரி இருக்கிறது. பத்தாவது மாதம் ஜனனம் என்பது நிரந்தரமானது.
ஆனால் வாழ்க்கை ஏன் பல கோணங்களில் போகிறது? மரணம் ஏன் பல வழிகளில் நிகழ்கிறது?
நீ கருப்பையில் இருக்கும்போது, நீ போகப்போகிற பாதைகளும், சாகப்போகிற இடமும், நேரமும், உன் மண்டை ஓட்டுக்குள் திணிக்கப்படுகின்றன. நீ எங்கே போனாலும், எப்படி வாழ்ந்தாலும், அது இறைவன் விதித்ததே.
மனத்தின் சிந்தனைப் போக்கு எப்படி வேண்டுமானாலும் போகலாம்; ஆனால் அது நடப்பதும் நடக்காத்தும் உன் விதிக்கோடுகளில் இருக்கிறது.
போன ஜன்மத்தின் எதிரொலியைக் கொண்டே அந்த ஜன்மத்தின் விதி நிர்ணயிக்கப்பெறுகிறது.
போன ஜென்மத்தில் உன் விதி பாவம் செய்யும்படி விதிக்கப்பட்டிருந்தால், அதற்கான பரிகாரம் இந்த ஜன்மத்தில் எழுதப்படுகிறது.
நீ எண்ணியது நடந்தாலும் நடக்காவிட்டாலும், எண்ணாதது நடந்தாலும், யாவும் உன் விதியின் விளைவே.
முயற்சி கால் பங்கு; விதியின் ஒத்துழைப்பு முக்கால் பங்கு.
“அறியாமையே விதியின் கைப்பாவை. அறிவு எல்லோருக்குமே தெளிவாக இருந்து விட்டால், விதியும் இல்லை. விதித்தவனும் இல்லை.”
“மனிதனின் அறியாமையே விதி என்றால், விதிக்குத் தனி நியமங்கள் இல்லையா?”
“இருக்கின்றன!
இந்த உருவத்தில், இந்த இடத்தில் பிறக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லை.
உங்களைப் பிறக்க வைத்தது விதியின் பிரவாகம். இப்படித்தான் வாழ வேண்டும் என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள்; அப்படி வாழ விடாமல் செய்வது விதியின் பிரவாகம்.
இந்தப் பெண்தான் எனக்குத்தேவை என்று முடிவு கட்டுகிறீர்கள்; அவளைக் கிடைக்க விடாமல் செய்வது விதியின் பிரவாகம்.
எபோது நீங்கள் நினைத்தது நடகவில்லையோ அப்போது உங்கள் நினைவுக்கு மேல் இன்னொன்று இருக்கிறது என்று அர்த்தம்.
அதற்கும் நம் மூதாதையர் சூட்டிய பெயரே விதி ”
“அந்த விதி எப்போது நிர்ணயிக்கப்படுகிறது; ஜன்னத்தில் தொடங்குகிறது.
தான் நினைத்தபடியெல்லாம் வாழ்க்கையை நடத்தி முடித்தவர்களை எத்தனைபேர்? வீரன் வெற்றி பெற்றால், அது வீரத்தால் வந்தது. கோழை தோல்வியுற்றால், அது கோழைத் தனத்தால் கிடைத்து. ஆனால் வீரன் தோல்வியுற்றாலோ, கோழை வெற்றி பெற்றாலோ, அவை விதியால் நிர்ணயிக்கப்பட்டவை!   ( அட ! அப்போ, நாம எல்லாம் வீரன்னு விதிக்கு தெரிஞ்சு இருக்குதே...! )
ஒன்று நடைபெற்ற பின்னால், ‘கொஞ்சம் அப்படிச்செய்திருந்தால் நடந்திருக்காதே’ என்று மதி சிந்திக்கிறது!
மதி ஏன் தாமதமாகச்சிந்திக்கிறது?
விதி முந்திக்கொண்டு விட்டது!”
“அப்படியானால் மனிதனின் மதியால் ஆகக் கூடியது ஒன்றுமே இல்லையா?”
“இருக்கிறது!
பள்ளம் என்று தெரியும்போது, அதில் விழாதே என்று எச்சரிப்பது மதி. அதைப்பள்ளம் என்று தெரிய வைத்தது விதி.
ஜனனத்துக்கும்முன்பும் மரணத்திற்குப்பின்பும், நாம் எங்கிருந்தோம் - எங்கு போகிறோம் என்று தெரியும்வரை, நமக்கு அப்பாற்பட்டது ஒன்று இருக்கிறது.  இடைப்பட்ட வாழ்க்கையை அது நடத்துகிறது. நடக்கும் எதுவும் நமது விருப்பத்தால் மட்டும் விளைந்தவை அன்று.
================================================
‘ஆன்மீக அடிப்படையின்படி, செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பலன் உண்டு’ என்பது நியதி. நல்ல செயல்கள் புண்ணியத்தையும், தவறான செயல்கள் பாவத்தையும் கொடுக்கின்றன. நாம் ‘கர்மம்’என்று குறிப்பிடுவது, முந்தைய செயல்கள் தற்பொழுது விரும்பத்தகாத பலனை அளிக்கும் செயல்களே.
நம் வாழ்க்கை, செயல்களால் அமைந்தது. ஆனால் எல்லாச் செயல்கட்கும் உடனே பலன் கிடைப்பதில்லை. நமக்குப் பல வகைகளிலும் பலமும், திறமையும் அரண்களாக அமைகின்றன. காலப்போக்கில் அந்த அரண்கள் பலம் இழந்தும்போகின்றன. ஆரோக்கியம், செல்வம், குடிப்பிறப்பு, அந்தஸ்து, முற்பிறவிப் புண்ணியம், அறிவு, ஆற்றல், இனிமையான பழக்கவழக்கங்கள், உற்றார் தொடர்பு, ஊரார் நட்பு என மனிதனுக்குப் பல வகையான பலம் இருப்பதால் அவன் செய்யும் காரியங்களில் குறையோ, தவறோ நேரும்பொழுது அதற்குண்டான பலன், அவனுக்கு உடனே கிடைப்பதில்லை. ஆனால், காலக் கணக்கின்படி கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும்.... 
எது சம்பந்தப்பட்ட பலா பலன்கள் - நமக்கு கிடைக்கவில்லையோ, அது நமது கர்ம வினை சம்பந்தப்பட்டது என்பது உறுதியாக உணர்ந்து கொள்ளப்பட வேண்டிய விஷயம்.
அது - வாழ்க்கை(த்) துணை சம்பந்தப்பட்டதோ , இல்லை கடன், நோய் எதிரிகளின் தொந்தரவோ, அலுவல், வியாபார தொடர்பு மூலம் ஒரு நிம்மதி அற்ற சூழலோ அல்லது எதுவோ - அது உங்களுக்கே தெரிந்து இருக்க கூடும்...!
சரி, என்ன செய்யலாம்....? இன்னும் கொஞ்சம் யோசிப்போம்...........!
கடவுள் வழிபாடு - உண்மையா, ஆத்மார்த்தமா....கெஞ்சி, கதறி , உருண்டு பிரண்டு....  இப்படி தொடர்ந்து...... பரிகாரம் ஏதாவது...?
நீங்கள் செய்யும் இறை வழிபாடு - உங்களை நிச்சயம் ஒரு நல்ல தீர்வு / பரிகாரத்துக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் வழி  காட்டும். முழு நம்பிக்கையோடு அந்த பரிகாரம் செய்வது , நிச்சயம் உங்கள் கர்ம பலன்களை குறைக்கும்....!
என்னதான் விதிப்படி நடக்கும் என்பது இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லை வரை - சுய சங்கல்பத்துடனான செயல்பாடுகள் அனுமதிக்கப் பட்டு இருக்கின்றன...! அந்த செயல்களை தீர்மானிப்பதில் - இறை வழிபாடு உங்களை நல்ல பாதையில் அழைத்துச் செல்லும் என்பது என் தனிப்பட்ட கருத்து...! முயற்சி - முடிவு எல்லாமே சுபமாக மாற்ற , அந்த இறை கருணை செய்யும்.... இது என் அசைக்க முடியாத நம்பிக்கை....!
எப்பவுமே, ஏதாவது ஒரு சோகத்தில தான் - விதியை நாம இழுப்போம்..! ஐயோ பாவம் அவன் தலை எழுத்து....!சந்தோசத்துக்கு...?அதிர்ஷ்டம்.  ஹே.... செம லக்கிடா ....! இப்படித்தான் பேச்சு வரும்.....!
கர்ம பலன்களை குறைத்து, வெற்றி பாதையில் இறை அருளுடன் நாம் பயணிக்க - என்னோட சொந்த வாழ்க்கையில் - நான் கடை பிடித்த  / கடை பிடித்துக் கொண்டு இருக்கும் சில விஷயங்களை - (பகிர்ந்து கொள்ளக் கூடிய சில விஷயங்களை) - சொல்லலாம்னு நினைக்கிறேன்....!  பதிவு ரொம்ப நீஈஈஈளமாகிடுச்சு.... அதனாலே ....அடுத்த பதிவுக்கு வாங்க , அங்கே கண்டினியூ பண்ணலாம்.......!
இதுவே மொக்கை.... இதுல இன்னொரு பதிவான்னு பதறாதீங்க ...! நிஜமாகவே சுவாரஸ்யமான பல விஷயங்கள் இருக்கு...! பார்ப்போம் , யார் யாருக்கு படிக்கிறதுக்கு விதி , இல்லை இல்லை அதிர்ஷ்டம் இருக்குதுன்னு......!"எல்லாம் உங்க தல விதி!", எப்படி மாட்டிக்கிட்டிங்க பாத்திங்களா?   விதி விளையாடும்போது அது எந்த விதிக்கும் கட்டுப்படாது பாஸ்.....!
இது எத்தனை கட்டுரைகளா வரும்னு எனக்கு தெரியாது....! நிஜமா எதுவும் திட்டம் இடலை... அருணாச்சலம் சில விஷயங்களை, சிலருக்கு தெரியப் படுத்தனும்னு நினைக்குது ...  என்னை ஒரு கருவியா தேர்ந்து எடுத்து இருக்குது ....அவ்வளவுதான் இந்த நொடியில் எனக்கு தோணுது.... பார்க்கலாம்.....! முழுக்க முழுக்க சிந்தனை சிதறல்கள் மட்டுமே....! தேவையானதை எடுத்துக்கோங்க...! தேவை இல்லைன்னு நினைக்கிறதை விட்டுடுங்க ....! சிம்பிள்...! இடையிடையே நீங்கள் கொடுக்கும் கமெண்ட்ஸ் உற்சாகம் அளிக்கும்...! அதனால ஓரிரு வார்த்தைகளில் இல்லாமல், கொஞ்சம் தாராளமா உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்......! என்ன ரெடியா....?
பிரியமுடன் ,

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.